பாடம் 2 இயேசுவை வேதம் தேவன் என்று ஏன் கூறுகிறது
பாடம் 2 இயேசுவை வேதம் தேவன் என்று ஏன் கூறுகிறது
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே மீண்டுமாக இந்த பாட வகுப்பின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் முதல் பாடத்தில் திரித்துவ கொள்கையினரின் வசன சான்றுகள் மூலம் அவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒருவர்தான் என்று சொல்லுவதை பார்த்தீர்கள். அந்த பாடத்தில் கூறப்பட்ட படியே தேவன் ஒருவர் மட்டும்தான் அவரைத்தவிர வேறொருவரும் இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அந்த தேவன் இயேசுதான் என்றுதான் சொல்வதைதான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.
உங்கள் கேள்வி : அப்படியானால் இயேசுவை வேதம் தேவன் என்றும் ஆவியானவர் என்றும் சொல்லும் வசனங்களை போன வகுப்பில் அவர்கள் நிரூபிக்கும் வசனங்களாக காண்பித்தீர்களே அதை பொய் என்று சொல்றீங்களா?
பதில்: இல்லை
இயேசுவை வேதம் தேவன் என்று சொல்வதோ ஆவியானவர் என்று சொல்வதோ பொய் என்று சொல்லவில்லை. அவருக்கும் மேலான ஒரு தேவன் இல்லை என்று சொல்வதைதான் தவறு என்கிறேன். மேலும் இயேசு ஆவியானவர் என்று சொல்வதையும் பொய் என்று சொல்லவில்லை ஆனால் அவர்தான் பரிசுத்தஆவி என்று சொல்வதைதான் தவறு என்று சொல்கிறேன். சரி வசனங்களை கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.
முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவென்றால் தேவன் என்று வேதம் இயேசு என்னும் ஒருவருக்கு மட்டும் குறிப்பிடவில்லை இன்னும் அநேகரை தேவன் என்று வேதம் கூறுகிறது. அவர்கள் யாரென்று பார்போம்.
ஆதியாகமம் 16: 9 – 13
11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
13. அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.
மேற்கண்ட வசனத்தில் ஆகார் என்னும் ஒரு பெண் தன்னோடு பேசின தூதனுக்கு நீர் என்னை காண்கிற தேவன் என்று பேரிடுகிறதை பார்க்கிறோம். மேலும்,
நியாயாதிபதிகள் 13: 20 - 22.
20. அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.
21. பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,
22. தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.
மேற்கண்ட வசனத்தில் மனோவா என்னும் ஒருவன் தன்னோடு பேசின தூதனை கண்டு தன் மனைவியிடம் நாம் தேவனை கண்டோம் சாகவே சாவோம் என்று சொல்வதை பார்க்கிறோம்.
ஆக வேதம் தூதர்களையும் தேவன் என்று கூறுவதை பார்க்கிறோம். மேலும்
யாத்திராகமம் 4:16. அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.
மேற்கண்ட வசனத்தில் மோசே ஆரோனுக்கு தேவனாயிருக்கும்படி தேவனால் தகுதி பெறுகிறதை பார்க்கிறோம்.
யாத்திராகமம் 7:1. கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
மேற்கண்ட வசனத்தில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு மோசே தேவனாய் இருக்கும்படி தேவனால் தகுதி பெறுகிறதை பார்க்கிறோம்.
ஆக வேதம் மோசேயையும் தேவன் என்று கூறுவதை பார்க்கமுடிகிறது. மேலும்,
2 கொரிந்தியர்- 4:4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
மேற்கண்ட வசனத்தின் மூலம் இந்த உலகத்தில் தேவ வசனம் செல்லாதபடிக்கு மனிதனை தன் வசப்படுத்தும் சாத்தானையும் வேதம் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்று கூறுவதை பார்க்கிறோம். மேலும் கடைசியாக,
யோவான் -10:34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
யோவான் -10:35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
மேற்கண்ட வசனத்தின் மூலம் தேவ வசனத்தை பெற்றுக்கொண்ட மனிதர்களையும் வேதம் தேவர்கள் என்று கூறுவதை பார்க்கிறோம். அதாவது பன்மையில் தேவர்களாகவும் ஒருமையில் தேவனாகவும் மனிதனை குறிப்பிடுகிறது.
இவ்வாறாக வேதம் தூதன், மோசே, சாத்தான், மனிதன், ஆகிய இவர்களையும் தேவன் என்றுதான் கூறுகிறது.
உங்கள் கேள்வி : சரி, வேதம் ஏன் இவர்களை தேவன் என்று அழைக்கிறது? தேவன் என்ற வார்த்தையின் அர்த்தம்தான் என்ன?
பதில் : நீங்கள் கேட்பது சரியான கேள்வி, நாம் தேவன் என்ற வார்த்தையை சில வசனங்களின் மூலம் புரிந்து கொள்வோம்.
ஆதியாகமம் 2 முதல் 3 அதிகாரம் வரை வாசித்து பார்ப்பீர்களானால், அதில் தேவன் மனிதனுக்கு நன்மை தீமை அறியதக்க கனியை புசிக்கவேண்டாம் (ஆதி 2:16) என்று சொன்னார், காரணம் ஏனென்றால் அதை புசிக்கிறவன் நன்மை தீமை என்னதென்று அறிந்து தேவனை போல் ஆகிவிடுவான், அவன் தேவனாக மாறினால் பின்பு அவனால் பூமியிலே மனிதனாய் வாழ முடியாமல் போய்விடும் என்பதை தேவன் அறிந்து அதை சாப்பிடவேண்டாம் அதை சாப்பிடும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் சாத்தானோ அந்த ரகசியத்தை மனிதனுக்கு உடைத்து அவர்களை வஞ்சித்து புசிக்கவைத்தான் (ஆதி 3:4,5). இதன் நிமித்தம் மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் தேவனைப்போல் ஆனான் (ஆதி 3:22).
இதன் மூலம் நமக்கு என்ன புரிகிறது, நன்மை எது தீமை எது என்று அறிந்தவர்களே தேவன், ஆனால் மனிதன் நன்மை தீமை என்னதென்று அறியத்தக்கவனாய் ஆனானே தவிர அறிந்தவன் அல்ல. உதாரணமாக ஒரு குழந்தை தவறு செய்தால் சட்டத்தினால் தண்டனையை பெறாது காரணம் அந்த குழந்தைக்கு நல்லது எது கெட்டது எது என்று நிதானிக்கக்கூடிய அறிவு இல்லை, ஆனால் பெரியவர்களோ தாங்கள் செய்யும் தவறுகளுக்கு தக்க தண்டனையை சட்டத்தினால் பெறுகிறார்கள். அந்த தவறை அவர்கள் தெரியாமல் செய்தாலும் சட்டம் அவர்களை மன்னிப்பதில்லை காரணம் அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று நிதானிக்க கூடிய அறிவு உண்டு, ஆக மனிதனைப்போல் சிந்திக்க கூடியவர்களாய் படைக்கப்பட்ட நாம் நன்மை தீமை அறியக்கூடிய கனியை புசித்ததால் தேவனைபோன்று சிந்திக்க கூடியவர்களாய் மாறினோம். குழந்தைகளுக்கு மனிதனாய் வாழ அதன் பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுபோல மனிதன் தேவனைபோன்று வாழ தேவன்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். அதைத்தான் தேவன் தமது வார்த்தைகள் மூலமாய் நமக்கு நல்லது எது தீயது எது என்பதை போதிக்கிறார். ஆகவேதான் தேவவசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் (யோவான் 10:15) என்று வேதவசனம் சொல்லுகிறது.
இதன் நிமித்தமாகவே தேவ வார்த்தைகளை பெற்றுக்கொண்டு ஆகாருக்கும் மனோவாவுக்கும் எடுத்து சொன்ன தூதர்கள் தேவன் என்று அழைக்கப்பட்டார்கள். அதுபோலவே மோசே பார்வோனுக்கும் மற்றும் இஸ்ரவேலர்களுக்கும் தேவ வார்த்தைகளை சொல்லும்படி தெரிந்துகொள்ளப்பட்டதினாலே தேவன் என்று தகுதி பெற்றான். அதுபோலவே சாத்தானும் தன்னுடைய வசனங்களை தேவனுடைய வசனங்களென்று பொய் சொல்லி இந்த பிரபஞ்சத்தை பொய் வசனங்களுக்கு கீழ்படுத்துவதினாலே இப்பிரபஞ்சத்திற்கு தேவனென்று அழைக்கப்படுகிறான். இப்படி ஓரிரு வசனங்களை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டதினாலே இவர்கள் தேவன் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் இயேசுவோ எல்லோருக்கும் நித்தியஜீவனை அளிக்கும்படி நமக்காக ஜீவ வசனங்களை தேவனிடத்திலிருந்து கொண்டுவந்ததினாலே(யோவான் 12:49,50) இவர் தேவன் என்று அழைக்கப்பட்டார். இவரை வேதம் தேவன் அழைக்க பல காரணங்கள் உண்டு.
- இவர் தேவனுடைய ஒரே பேரான குமாரன். (யோ 3: 16 )
- இவர் தேவனுடைய சகல வார்த்தைகளையும் அறிந்திருக்கிறவர். (மத் 11:27)
- இவர் தேவனுடைய சகல வார்த்தைகளையும் நிறைவேற்றுகிறவர். (யோ 8 :29)
- இவர் தேவனுடைய வசனத்தை கொண்டு சகலத்தையும் தாங்குகிறவர்.(எபி 1:2,3)
- தேவத்துவங்களெல்லாம் சரீரப்பிரகாரமாக இவருக்குள் அடங்கி இருக்கிறது.(கொலே 2 : 9)
- சகலமும் இவர் மூலமாய் உண்டாயிருக்கிறது. (கொலே 2:16)
- சகலமும் இவருக்காகவே உண்டாயிருக்கிறது.(கொலே 2:16)
- சர்வ சிருஷ்டிக்கும் ஆதியானவர். (வெளி 3:14, கொலே 2:15)
- சாலமோனுடைய ஞானத்திலும் பெரியவர். ( மத் 12:42)
- இவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி. (அப் 17:31, யோ 5 : 22)
- இவர் பிதாவாகிய தேவனைப்போன்று நித்திய காலமாய் வாழக்கூடிய வரத்தைப் பெற்றவர். (யோ 5 :26)
- தேவதூதனாகிய யோவான் இவர் பாதரட்சையை அவிழ்க்கவும் பாத்திரன் அல்ல . (மத் 3 : 11)
- நாம் இவர் பாதரட்சையில் படிந்த தூசுக்கும் சமானமானவர்களல்ல.
- தேவதூதர்களெல்லாம் இவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ( 1 பேது 3 : 22)
- வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றவர். (மத் 28 :16)
- முழங்கால் யாவும் இவர் முன் முடங்கும். (பிலி 2 : 10)
- தேவனுடைய ஒரே வாரிசு (யோ 16:15, ரோ 8 : 17)
இப்படி சொல்லப்போனால் பிதாவாகிய தேவனுடைய அநேக சக்திகளை இவர் தனக்குள் வைத்திருக்கிறார். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் சாதராணமானவர்களையே வேதம் தேவன் என்று சொல்ல இவரை சர்வத்திர்க்கும் மேலான தேவன் என்று சொல்லுவதிலே என்ன தவறு இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் சர்வம் என்று சொல்லுவதினாலே அந்த சர்வத்தில் பிதாவாகிய தேவனும் இருக்கிறார் என்று நாம் சொல்லக்கூடாது. காரணம்
1 கொரி 15 : 27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
மேற்கண்ட வசனத்தின்படி சகலமும் என்று சொல்லும்போது தேவன் அந்த சகலத்தில் ஒருவர் இல்லை. அவர் சகலத்திலும் சகலமுமானவர்.
மேலும் இயேசுவை மகா தேவன் என்று சொல்லுவதினாலே இவரைவிட பெரிய தேவன் இல்லை என்று முடிவுக்கு வரக்கூடாது. காரணம் மகா என்றால் பெரிய என்று அர்த்தமே தவிர அவரைத்தவிர பெரியவர் இல்லை என்று பொருள் இல்லை.
மத்தேயு 12:41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள்.
மத்தேயு 12:42 தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.
மேலும் இயேசு தன்னைக்குறித்து மக்களுக்கு எடுத்து சொல்லும்போது நான் தேவாலயத்திலும் பெரியவர் என்றும், யோனாவிலும் பெரியவர் என்றும், சாலமோனிலும் பெரியவர் என்றும் சொல்லுகிறார். இவைகளையெல்லாம் அவர் தன்னை மனுஷனாய் எண்ணி சொல்லவில்லை காரணம் மாம்சத்தில் இயேசுவானவர் மிகவும் சிறியவரே ,ஆனால் உண்மையிலோ அவர் தேவனுடைய குமாரன் அதினாலே தான் இவைகள் எல்லாவற்றிலும் பெரியவர் என்றும் ஆபிரகாமுக்கு முன்னே நான் இருக்கிறேன் என்றும் கூறுகிறார். இயேசுவானவர் ஒருபோதும் தன்னை மனுஷனாக எண்ணி பேசியதே இல்லை. அதேபோலத்தான் இந்த வசனமும்
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
யோவான் 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
எபிரெயர் 6:13 ஆபிரகாமுக்கு தேவன் (பிதா) வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
அதேபோலத்தான் மெய்யான தேவன் என்று இயேசுவை சொல்லுவதினால் இயேசுதான் அந்த பிதாவாகிய தேவன் என்றும் நாம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. காரணம் இயேசுவுக்கும் மேலான ஒரு மெய்யான தேவன் உண்டு.
யோவான் 17: 3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
என்று இயேசுவானவரே பிதாவை நோக்கி ஜெபிக்கிறதை பார்க்கிறோம்.
ஆகையினால் இயேசுவை வேதம் தேவன் என்று சொல்வதினால் அவர்தான் தேவன் அவரைத்தவிர வேறொருவரும் இல்லை என்று நாம் முடிவு செய்துவிடக்கூடாது. ஏனெனில் நாம் வேதத்தில் அநேக தேவர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.மற்றும் இயேசுவை வேதம் ஏன் தேவன் என்று அழைக்கிறது. என்பதையும் பார்த்தோம். இப்படி
1 கொரி 8 : 5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
ஆக இயேசுதான் அந்த ஒரே தேவனா அல்லது அவருக்கும் மேலான ஒரு தேவன் உண்டா என்பதைப்பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது, அதைப்பற்றி நாம் அடுத்த பாடத்தில் பார்போம்.
கிறிஸ்துவின் பணியில்
Matthews Sivakumar,
Church of Christ, chennai.







Comments
Post a Comment