பாடம் 1 திரித்துவம் என்பது என்ன?



பாடம் 1 திரித்துவம் என்பது என்ன?


கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இப்பொழுது நீங்கள் படிக்க நினைக்கும் பாடமானது உலகின் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பிளவை ஏற்படுத்தும் ஒரு பாடமாகும். ஆம் காரணம் ஒரு சில கிறிஸ்தவர்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒருவர் அதாவது திரித்துவ தேவன் என்று போதிக்கிறார்கள் வேறு சிலர் இம்மூவரும் தனித்தனி நபர் என்று போதிக்கிறார்கள். இதினால் பல கிறிஸ்தவர்கள் பெரும் குழப்பத்தினால் தவிக்கிறதை நாம் பார்க்கிறோம். இந்த இரண்டு பிரிவினரும் வசனத்தை கொண்டு பேசுவதினால் மக்கள் எந்த பிரிவினரிடம் போதனையை கேட்கிறார்களோ அதுவே சரியான போதனை என்று உடனேயே முடிவு செய்து விடுகிறார்கள் இதுதான் முக்கியமான பிரச்சனை. இந்த குழப்பத்திலிருந்து நீங்கள் ஒரு முடிவு காணவேண்டுமா? அதற்கு ஒரே வழிதான் உண்டு, அது என்னவென்றால் நீங்கள் இரு பிரிவினரின் போதனையையும் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் எது சரியான போதனை என்பதை கண்டுபிடிக்க முடியும். 

எரேமியா 6: 16. வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

ஆம் நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் வேண்டுமென்றால் நாம் மேற்கண்ட வசனத்தின்படிதான் செய்ய வேண்டும். அதாவது,

1. வழிகளில் நிற்கவேண்டும் ( இரண்டு பிரிவினரின் போதனையையும் நின்று கவனிக்க வேண்டும் )

2. பூர்வபாதை எவையென்று கேட்டு விசாரித்து (நன்றாய் கேட்டு விசாரிக்க வேண்டும்)

3. நல்லவழி எங்கே என்று பார்த்து நடவுங்கள் (வசனத்தின்படி எதுசரியான வழி என்று கண்டுபிடித்து அதின் வழியிலே நடக்கவேண்டும்).

உங்கள் கேள்வி: “சரி இரண்டு வழியை பார்க்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே இதற்க்காக நாங்கள் இருகூட்டத்தாரின் சபைக்கும் போய்தான் கற்றுக்கொள்ளவேண்டுமா?”


பதில்: இல்லை,


   நான் ஏற்படுத்தி இருக்கும் இந்த தமிழ்நாடு கிறிஸ்துவின் சபை இணையதளத்தில் இருதரப்பினருடைய வாதத்தையும் உங்கள் கண் முன் நிறுத்துவேன் இதில் ஒன்றையும் மறைக்க மாட்டேன், இதில் எது சரியானது என்பதையும் விளக்குவேன். பின்பு எந்த வழியில் நான் சென்றால் நான் இளைப்பாறுதல் அடையமுடியும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.


சரி நாம் பாடத்துக்கு செல்வோம் நீங்கள் முதலாவது அறிய வேண்டிய பிரிவினர் யாரென்றால், திரித்துவம் என்ற கொள்கையை பின்பற்றும் பிரிவினர் பற்றிதான் அவர்களின் வாதம் என்ன என்பதை பார்போம்.



திரித்துவம் (trinity)


திரித்துவம் என்பது பிதா குமாரன் பரிசுத்தஆவி இம்மூவரும் ஒருவராகவும் செயல்களிலே மூவராகவும் செயல்படுகிறார்கள் என்கிற அறிவைத்தான் திரித்துவம் என்று சொல்கிறார்கள். சரி இவர்கள் போதிக்க வசன ஆதாரங்கள் இருக்கத்தானே செய்யும். அது என்னவென்றுதான் பார்ப்போம்..



ஏசாயா 43:10. நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

ஏசாயா 45:21. நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.

மேற்க்கண்ட வசனத்தின் மூலம் அவர்கள் சொல்லுவது என்னவென்றால் தேவன் ஒருவரே அவரைத்தவிர வேறே தேவன் இல்லை என்று சொல்லுகிறார்கள். இது நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய வசனம்தான்.


உங்கள் கேள்வி: சரி தேவன் ஒருவர்தான் வேறே தேவன் இல்லை என்பது புரிகிறது, இயேசுதான் அந்த தேவன் என்று அவர்கள் சொல்லக் காரணம் என்ன?


பதில்: காரணம் உண்டு


யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 1:14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

1 தீமோத்தேயு 3:16. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

அப்போஸ்தலர் 20:28. ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

மேற்கண்ட வசனங்களின் மூலம் இயேசுவானவர் ஆதியிலே தேவனாக வார்த்தையாக இருந்தார் எனவும் அவர் மாம்சமாய் பூமிக்கு வந்தார் எனவும் அவர் தமது சுய இரத்தத்தை கொண்டு சபையை மீட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். ஆதலால்தான் இயேசுவானவர் ஆதியிலே பிதாவாகிய தேவனாய் இருந்தார் பின்பு இந்த உலகத்தில் குமாரனுடைய அவதாரமெடுத்து வந்தார் எனவும் கூறுகிறார்கள்.

மேலும் இதை உறுதிப்படுத்த 

தீத்து 2:13. நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

1 யோவான் 5:20. அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

ரோமர் 9:5. பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.

ஏசாயா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


மேற்க்கண்ட இந்த வசனங்களின் மூலம் இயேசுவானவர் ஒரு மகாதேவனாகவும், மெய்யான தேவனாகவும், சர்வத்திற்கும் மேலான தேவனாகவும், வல்லமையுள்ள தேவனாகவும் வேதம் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஆக இந்த வசனத்தின் மூலமாக அவர்கள் இன்னும் உறுதியாக இயேசுவே தேவன் வேறொருவரும் இல்லை என்று நிரூபிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அவர்கள் சில உதாரணங்களையும் காட்டுகிறார்கள், அது என்னதென்று பார்ப்போமே,

யோவான் 20:28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

யோவான் 20:29. அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவான் 14:9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

மேற்க்கண்ட இந்த உதாரணங்களின் மூலம் அவர்கள் இயேசுதான் அந்த ஒரே தேவன் என முடிவே செய்துவிட்டார்கள்.




உங்கள் கேள்வி: “சரி இயேசுதான் பிதா அவர்தான் குமாரனாக ரூபமெடுத்து இந்த உலகத்தில் வந்தார் என அவர்கள் சொல்வது புரிகிறது, பரிசுத்த ஆவியும் அவர்தான் என்று சொல்கிறார்களே அதற்க்கும் ஏதாவது வசனம் உண்டா”? 

பதில்: வசனம் உண்டு

2 கொரிந்தியர் 3:17. கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.

2கொரிந்தியர் 3:18. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.


மேற்க்கண்ட வசனத்தில் கர்த்தரே ஆவியானவர் என்று சொல்லப்பட்டு இருக்கிறதல்லவா இதைக்கொண்டுதான் பரிசுத்த ஆவியானவரும் இயேசுதான் என்று முடிவு செய்து விடுகிறார்கள். 

சரி இதன்மூலம் நமக்கு என்ன புரிகிறது! அவர்கள் திரித்துவம் என்று சொல்வதற்க்கு போதிய ஆதாரமான வசனங்கள் அவர்களுக்கு இருப்பதினால் பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒருவர் செயல்களில்தான் மூன்றாக செயல்படுகிறார்கள் என்று சொல்லி உலகையே நம்ப வைக்கிறார்கள்.


உங்கள் கேள்வி: சரி சகோதரரே, திரித்துவத்தைப்பற்றிதான் அவர்கள் சொல்வதைதான் மிகத்தெளிவாக நீங்களே சொல்லிவிட்டீர்களே பின்பு ஏன் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்றீங்க?


பதில்: நீங்கள் கேட்பது சரிதான் முன்பு நானும் இந்த மேலோட்டமான வசனங்களை நம்பிதான் அநேக மக்களுக்கு போதித்தேன், பின்புதான் நான் இந்த வசனங்களின் ஆழங்களை பார்த்து வியப்படைந்து தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். நான் கண்ட அந்த தெளிவைதான் உங்களுக்கு பின் வரும் பாடங்களில் பகுத்து எழுதி இருக்கிறேன். நான் அந்த பாடங்களில் இவர்கள் காட்டிய இந்த வசனங்களை பொய் என்று நிரூபிக்கவில்லை, மாறாக இந்த வசனங்களின் உள்கருத்தையும் மேலும் இவர்கள் மூவரும் யார் அவர்களின் செயல்கள் என்ன என்பதையும் வெறும் வாய் சொல்லாக சொல்லாமல் எல்லாவற்றையும் வசனங்களைக்கொண்டே உங்களுக்கு விளக்கி காட்டியுள்ளேன். ஆகையால் நீங்கள் இந்த வகுப்பை தொடரும்போது அது முடியும் வரை ஒவ்வொரு பகுதியையும் சற்று ஆழமாய் சிந்தித்து தியானியுங்கள். முடிவில் உங்களுக்கு ஏதாகிலும் சந்தேகம் இருந்தால் அதையும் எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் உங்களுக்கு விளக்கம் தர காத்திருக்கிறேன். இதை முழுமையாக படிக்கும் உங்களுக்கு எந்த சந்தேகமும் வராது எனவும் நான் நம்புகிறேன்.





Church Of Christ,


Comments

Popular posts from this blog

பாடம் 2 இயேசுவை வேதம் தேவன் என்று ஏன் கூறுகிறது

பாடம் 3 ஒரே தேவனா அல்லது மூன்று தேவனா?